வெளியிடும் பணத்தினை கொண்டு, செலவு செய்யும் ஒன்றிய அரசாங்கம், மாநிலங்களில் இருந்து வரியின் மூலம், பண நீக்கம் செய்வது, புரிதல் இல்லாத, நியாயம் அற்ற, தேவை அற்ற மக்கள் விரோத செயல்
ஒரு மாநிலத்தில் இருந்து ஒன்றிய அரசு திரட்டிய வரியை விட, குறைவாகவே அந்த மாநிலத்தில் செலவு செய்யும் பொழுது, அந்த மாநிலம் வேண்டும் நிதியினை கொடுக்காமல் இருப்பது, பண அமைப்பு பற்றிய எந்த வித புரிதலும் இல்லாத மாபெரும் மக்கள் விரோத செயல், அநீதி. எப்படி என்பதை பார்ப்போம்.
பணமயமாக்கப் பட்ட பொருளாதாரத்தில், பண புழக்கமே வளர்ச்சி
பொருள் ஈட்டும் செயல்கள் பணத்தினை கொண்டு நடைபெறும் பொழுது, பண புழக்கம் அதற்கு இன்றியமையாததாகி விடுகிறது. பணம் புழக்கத்தில் தடை இல்லாமல், எந்த அளவு அனைவரையும் உள்ளடக்கி கைமாறி கொண்டு இருக்கிறதோ, அந்த அளவிற்கு, அதிக வேலை வாய்ப்பும், தனி நபர் வளர்ச்சியும் இருக்கும். பண புழக்கம் குறைவாக இருப்பதால் மட்டும் அல்லாமல், தற்பொழுது உள்ள பொருளாதார, சமூக கட்டமைப்பினால், பலர் அந்த புழக்கத்தின் உள்ளேயே இல்லாமல் இருக்கின்றனர்.
பணம் வெளியிடும் ஒன்றிய அரசு தவிர, மற்றவர்களுக்கு பணம் மதிப்பு மிக்கது
ஆனால், பணம் வெளியிடும் ஒன்றிய அரசிற்கு, அது, தற்பொழுது உள்ள பண வெளியீடு அமைப்பு முறையில், வெறும் காகிதமே. வேண்டும் அளவு பணம் புழக்கத்தில் இருக்கும் வரையில், அனைவருக்கும் வேலை வாய்ப்பும், முழு அளவு பொருள் ஆதார வளர்ச்சியும் அடைய முடியும். பணத்தை புழக்கத்தில் இருந்து நீக்கி விட்டால், அது வளர்ச்சியை அத்துடன் நிறுத்தி விடுகிறது, முழு வேலை வாய்ப்பும் முடியாமல் ஆகி விடுகிறது. பணம் புழக்கத்தில் ஓரளவு மட்டும் கைமாறினால், அந்த அளவிற்கே வேலை வாய்ப்பினை ஏற்படுத்தும். பணத்தை சேமிப்பதற்காக புழக்கத்தில் இருந்து நீக்குவதை தவிர்க்க முடியாது.
பணத்தை புழக்கத்தில் விடுவது ஒன்றிய அரசின் கடமை
முழு வேலை வாய்ப்பை கொடுக்கும் வரையில் பணத்தை புழக்கத்தில் விடுவது ஒன்றிய அரசின் கடமை. முழு வேலை வாய்ப்பே அதற்கு வரம்பு. அதிக வேலை வாய்ப்பினால் புழக்கத்தில் அதிகமாகும் பணத்தினை கொண்டு வாங்க கூடிய பொருட்களை, அந்த வேலைகளை கொண்டு உற்பத்தி செய்து கிடைக்க செய்ய வேண்டும். அதன் மூலம், பண புழக்கம் அதிகரிப்பதால் வரும் விலை ஏற்றத்தை தவிர்க்க முடியும்.
வெளியிடும் பணத்தினை கொண்டு ஒன்றிய அரசாங்கம் செலவு செய்கிறது, வரி வசூலை வைத்து அல்ல
பணம் வெளியிடும் தனிப் பெரும் அதிகாரத்தை தன்னிடம் கொண்டுள்ள ஒன்றிய அரசாங்கம், தனது செலவினை, தான் வெளியிடும் புதிய பணத்தினை கொண்டு செய்கிறது.
மாநில அரசாங்கத்திற்கு வரியே வருமானம்
வரி வசூல் மூலம் கிடைக்கும் நிதியே, மாநில அரசாங்கத்தின் வருமானம்; அந்த வருமானத்தை கொண்டே, மாநில அரசாங்கம் தனது செலவை செய்கிறது. திரட்டப் படும் வரியினால் குறையும் பணப்புழக்கம், பெரும் அளவில் பாதிப்பை உண்டாக்கும்.
மாநிலத்தின் வரி முழுவதும் அந்த மாநிலத்திலேயே செலவு செய்ய வேண்டும்
ஒன்றிய அரசாங்கத்தால், ஒரு மாநிலத்தில் வசூலிக்கப் படும் வரி, அந்த மாநிலத்திற்கு முழுவதுமாக கொடுக்கப் பட்டு, பணப் புழக்கம் குறைக்க படாமல் இருந்தால், அந்த மாநிலம் மிகச் சிறந்த வளர்ச்சியை அடைந்து, நாட்டிற்கே பெரும் பயனை கொடுக்கும். குறைந்த வரி வருமானம் உள்ள மாநிலங்களுக்கு, அந்த மாநிலங்களின் நிதி தேவை அதிகமாக இருக்கும் பொழுது, ஒன்றிய அரசாங்கம், தான் வெளியிடும் புதிய பணத்தினை கொண்டு நிதி தேவையை பூர்த்தி செய்து, அந்த மாநிலங்களின் வளர்ச்சியை, வளர்ந்த மாநிலங்களின் அளவிற்கு கொண்டு வரலாம்.
நிதி மறுப்பு, பண வெளியீட்டு அமைப்பு பற்றி புரிதல் இல்லாததால் நடக்கும் அநீதி
ஆனால், வரியில் இருந்து கிடைக்கும் நிதியினை கொண்டு செலவு செய்ய வேண்டிய தேவை, ஒன்றிய அரசாங்கத்திற்கு இல்லாத பொழுது, மாநிலத்தில் திரட்டப் படும் வரியின், பெரும் பகுதியை தான் எடுத்துக் கொண்டு, அந்த மாநிலத்திற்கு வேண்டிய நிதியை மறுப்பது, புரிதல் இல்லாத, நியாயம் அற்ற, தேவை அற்ற செயல். பண வெளியீட்டு அமைப்பு பற்றி புரிதல் இல்லாததால், ஒரு மாநிலத்தில் புழக்கத்தில் இருந்து நீக்கப் பட்ட பணத்தை, அந்த மாநிலத்தில், அதுவும் பேரிடர் காலத்தில், மீண்டும் புழக்கத்தில் விட மறுப்பதை, என்னவென்று சொல்வது?
பண வெளியீட்டு அமைப்பு புரிதல், நாட்டின் அடிப்படை தேவை
ஒரு நாட்டின் பண வெளியீட்டு அமைப்புதான், மக்களின் இடையே புழக்கத்தில் உள்ள பணம் எப்படி புழக்கத்திற்கு வருகிறது, எவ்வளவு பணம் புழக்கத்திற்கு வருகிறது, வசூலிக்கப் படும் வரியினை கொண்டுதான் அரசாங்கம் தனது செலவினை செய்ய வேண்டுமா, அல்லது வசூலிக்கப் படும் வரி, பணப் புழக்கத்தை குறைக்கும் நடவடிக்கையா போன்றவற்றை தீர்மானிக்கிறது.
தற்பொழுது நம் நாட்டில் உள்ள பணம் வெளியிடும் முறை, சர்வதேச நாடுகளுக்குள் ஏற்றுக்கொள்ளப்பட்ட, மிதக்கும் மாற்று விகித நாணய முறையே (floating exchange rate currency system) ஆகும்.
இந்த பண வெளியீட்டு முறையில்,
(i) வேண்டும் பொழுது, பணத்திற்கு ஈடான தங்கத்தினை கொடுக்கும் உத்தரவாதம் அரசாங்கத்திற்கு இல்லை
(ii) பண மாற்று விகிதம், அந்நிய செலவாணி சந்தையில் மிதக்க விடப்பட்டு உள்ளது. (நிலையான பண மாற்று விகிதம் என்றால், அதனை காப்பாற்ற தங்க கையிருப்பு இருக்க வேண்டும்.) எனவே,
(iii) எவ்வளவு பணம் வெளியிடலாம் என்பதை தங்க கையிருப்பை கொண்டு தீர்மானிப்பது இல்லை.
அந்த வரம்பு இல்லாததால், ஒன்றிய அரசாங்கம் தனது செலவிற்கு தேவையான பணத்தினை வெளியிட்டு கொள்ளலாம். எனவே, அதற்கு வரி என்பது பணத்தினை புழக்கத்தில் இருந்து நீக்கும் செயலே ஆகும்.
மாநில அரசு பண உபயோக்கிப்பாளரே
பண வெளியீட்டாளர் ஆக ஒன்றிய அரசு இருக்கும் பொழுது, மாநில அரசுகள், பொது மக்களைப் போல், பண உபயோக்கிப்பாளரே. பணம் வெளியிடும் அதிகாரம் அற்ற மாநில அரசுகளின் செலவிற்கு, வருமானம் தேவை. எனவே, நடைமுறையில் உள்ள பண வெளியீடு அமைப்பு முறையில், ஒரு மாநிலத்தில் வசூலிக்கப் படும் வரி, முழுவதுமாக அந்த மாநிலத்திற்கே கொடுக்கப் பட வேண்டும். தமிழ்நாடு போன்ற மாநிலங்களில், பணப் புழக்கம் குறைக்கப் படாமல் இருக்கும் பட்சத்தில், மேலும் பல மடங்கு வளர்ச்சியை காண முடியும்.
தற்போதைய பண வெளியீட்டு அமைப்பு, பொருளாதார சுதந்திரத்தை அளிக்கிறது
தங்க கையிருப்பு சார்ந்த வரம்பு இல்லாமல், அரசாங்கம் தனது செலவிற்கு பணம் வெளியிடலாம் என்ற பெரும் பொருளாதார சுதந்திரத்தை அளிக்கும் அற்புதமான பண வெளியீட்டு அமைப்பு, நடைமுறையில் உள்ளதால், பேரழிவு காலத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கும் பொழுது, அதனை எதிர்கொள்ள, அரசாங்கம் போர்கால துரிதத்தில், நாட்டினை தயார் நிலையில் வைத்து இருக்க வேண்டும். விளிம்பு நிலையில் இருப்பவர்களையே, பேரழிவுகள் பெரும் அளவில் பாதிப்பதால், அந்த நிலையிலிருந்து அவர்களை வெளியில் கொண்டு வருவது முதன்மையான தேவை ஆக உள்ளது. முழு வேலை வாய்ப்பும், அனைவருக்கும் சிறந்த வாழ்க்கை தரமுமே, அரசாங்கத்தின் கொள்கை நோக்கமாக இருக்க வேண்டும்.