அரசாங்கத்தால் ஏழ்மையை அடியோடு ஒழிக்க முடியும்.
முழு அதிகாரம் இருந்தும் முயற்சி இல்லை
ஏழைகளின் வாழ்க்கை முன்னேறாமல் இருப்பதற்கு, பெரும் காரணமே, அரசாங்கம் தான். பொருளாதாரத்தை முழுவதுமாக தனது கட்டுக்குள் வைத்துள்ள அரசாங்கம், அதாவது பொருளாதாரத்திற்கு தேவையான பண வெளியிடும் தனி உரிமை, பொருளாதார கொள்கைகள், பொருளாதார சட்டங்கள், பட்ஜெட் நெறிமுறைகள், பொருளாதார திட்டங்கள், வங்கிக் கடன்களை கட்டுப்படுத்தும் அதிகாரம், மற்றும் வட்டி விகிதத்தை நிர்ணயிப்பது என பொருளாதாரம் சார்ந்த அனைத்தையும் வடிவமைக்கும் முழு அதிகாரம் கொண்ட அரசாங்கம், மக்களது வாழ்க்கையை முன்னேற்றுவதற்கு தேவையான அனைத்து அதிகாரங்களையும், வளங்களையும் தன்னிடத்தே கொண்டது.
ஏழைகளின் வாழ்க்கையை முன்னேற்ற நோக்கமோ, முயற்சியோ, விருப்பமோ இல்லாததால் தான், அதற்கான எந்தவித திட்டமிடலும் இல்லை.
முனைப்பும், திட்டமிடலும் இருந்தால், முன்னேற்ற முடியும்
சாலை, மற்றும் போக்குவரத்து வசதிகள், தொழில் வளர்ச்சி, தொழிற்கூடங்களின், தொழிலாளர்களின் எண்ணிக்கை, பெண் தொழிலாளர்களின் எண்ணிக்கை, சமூக, பொருளாதார வளர்ச்சி, கல்வி, மருத்துவம் என்று அனைத்திலும், தமிழ்நாடு முன்னிலையில் இருப்பதும், வட மாநிலங்கள் மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பதுவுமே, அரசாங்கத்தால், அதற்கான முனைப்பும், திட்டமிடலும் இருந்தால், ஏழைகளின் வாழ்க்கையை முன்னேற்ற முடியும் என்பதற்கு சான்று.
தமிழ்நாட்டிலேயே, உயர் பதவிகளும், வேலைகளும், தொழில்களும் குறிப்பிட்ட சமூகத்தினரிடம் மட்டுமே இருந்தது. சில சமூகத்தினர் வாழும் தெருக்களில் மற்றவர்கள் நடந்து செல்ல முடியாத நிலைமை இருந்தது. சிலர் மட்டுமே கால் மேல் காலை போட்டு உட்காரலாம், சிலர் மட்டுமே மேல் சட்டை அணியலாம். கோட் அணியலாம் என்ற நிலைமை இருந்தது. ஒடுக்க பட்டவர்களுக்கு என தனி தெருக்கள், மற்றவர்களுடன் ஒன்றிணைந்து செயல்பட, வாழ முடியாத சூழல் இருந்தது. அதனை மாற்ற, முற்போக்கு இயக்கங்களின் ஆட்சியால் முடிந்தது. இன்றும் அந்த நிலைமைகள் மாறாத மாநிலங்கள் பல உண்டு. அரசாங்கத்தால், ஏழைகளின் வாழ்க்கையை முன்னேற்ற முடியும் என்பதற்கு இதுவும் மற்றுமொரு சான்று.
தமிழ்நாட்டிலும் விளிம்பு நிலை மக்கள் வெகுவாக உள்ளனர்
ஆனால், தமிழ்நாடு சமூக வளர்ச்சியில் இன்னும் அடைய வேண்டிய தூரம், நிறைய உள்ளது. விளிம்பு நிலையில் உள்ளவர்கள் தமிழ்நாட்டில் அதிக அளவில் இன்னும் உள்ளனரா என்று நம்மை நாமே கேட்டுக் கொண்டோமானால், ஆம் என்பதே உண்மை நிலவரம். வீட்டு வேலை செய்வோர், ரேஷன் அரிசியை நம்பி உள்ளோர், குடிசை வாசிகள், அம்மா உணவகத்தை சார்ந்து உள்ளோர் என அதிக அளவில் உள்ளனர். 100 நாள் வேலை திட்டத்தையும், ரேஷனையும், நம்பி 2 கோடி மக்கள் உள்ளனர். 100 நாள் வேலை திட்டத்தில், 85% பெண்களாகவும், SC, ST வகுப்பினர் 30% ம் உள்ளனர். மகளிர் உரிமை திட்டத்தினால் பயன் பெறுவோர் 1.15 கோடி பெண்கள்.
கீழ்நிலையில் இருக்கும் மக்கள், பெருமளவு கிராமங்களில் உள்ளனர். தமிழ்நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 50% மக்கள் கிராம வாசிகள். ஆனால், மாநகரங்களில் செய்யும் முதலீட்டில் சிறு பகுதியை கூட, கிராமங்களில் செய்வதில்லை. கிராம வளர்ச்சியில் செய்ய கூடியது வெகு அளவு உள்ளது. நோக்கமும், முனைப்பும் இருந்தால், இதனையும் தமிழக அரசினால் செயல் படுத்த முடியும்.
மக்கள் கையில் பணம் இருந்தால், அதன் சுழற்சி வளர்ச்சியை கொடுக்கும்
சென்னை மெட்ரோ ரயிலுக்காக மட்டுமே ஒரு லட்சம் கோடிக்கு மேலாக முதலீடு செய்யும் பொழுது, தமிழ்நாட்டின் 17600 கிராமங்களுக்கும், உற்பத்தி மற்றும் சமூக கட்டமைப்பிற்கு, ஒரு கிராமத்திற்கு 10 கோடி ரூபாய் முதலீடு செய்ய முடியும். கிராமங்களில் பண புழக்கத்தை அதிகரிக்கும் பொழுது, கிராம மக்களின் கையில் செலவிடவும், சிறு முதலீடு செய்யவும் பணம் இருக்கும் பொழுது, அந்த அளவிற்கு கிராம பொருளாதாரத்தை கிராம மக்களாலேயே முன் எடுத்து செல்ல முடியும்.
மக்கள் கையில் சேமிப்பு இருக்கும் பொழுது, முதலீட்டின் மூலம், அது சிறு மற்றும் குறுந்தொழில் வளர்ச்சியை அதிகரிக்கிறது. சேமிப்பினால், வாங்கும் திறன் அதிகரிக்கும் பொழுது, உற்பத்தி பொருட்களின் விற்பனை அதிகம் ஆகிறது. இந்த சேமிப்பு அனைவருக்கும் வாய்க்கும் பொழுது, பணத்தின் சுழற்சி மேலும் மேலும் அதிகரித்து, தொழில் பெரிய அளவில், அனைவரையும் உள்ளடக்கி வளர்கிறது. அரசாங்கம் கிராமங்களில் முதலீடு செய்வதன் மூலம் தான், பெரும் தாக்கத்தை ஏற்படுத்த முடியும். அதற்கு, ஆஸ்திரியாவில் நடந்த ஒரு நிகழ்வே சான்று. அது, வொர்கில் பரிசோதனை (Worgl Experiment) என்று சொல்லப் படுகிறது.
P.S: காவல் நிலையங்கள், நீதிமன்றங்கள், சிறை சாலைகள் போன்ற பொதுவசதி மன்றங்களில், பணக்காரர்கள் எப்படி நடத்த படுகிறார்கள், ஒடுக்கப்பட்டவர்கள் எப்படி நடத்த படுகிறார்கள் என்றால், ஒடுக்கப்பட்டவர்கள் ஒடுக்கப்பட்டவர்களாகவே எப்பொழுதும் நீடிக்க செய்யும் ஒரு செயல் தொடர்ந்து அங்கு நிச்சய படுத்த படுகிறது. பொது மன்றங்கள் எப்படி இருக்கிறது என்பது, சமூக வளர்ச்சியின் முக்கிய குறியீடு. நார்வே, ஸ்பெயின் முதலிய நாடுகளில் உள்ள சிறைச்சாலை போன்று தமிழ்நாட்டிலும் ஏன் வரக் கூடாது?.
மேலும் பேசுவோம்...
ராஜேந்திர ராசு
No comments:
Post a Comment